தவத்திரு சிதம்பரம் சாமி சகஜானந்தா அடிகளாரின் வாழ்கைக் குறிப்பு


அடிகளாரின் மெய் அன்பராய்த் திகழ்ந்த பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அவர்கள்  "ஆதி திராவிடர் புனர் வாழ்வும் தவத்திரு சுவாமி A .S . சகஜனந்தாவும்" என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். சகஜாநந்தா கலை இலக்கிய மையம் (SKIM) என்ற பெயரை சூட்டுவதற்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து ,அந்த நூலையும் வழங்கிய பேராசிரியருக்கு நன்றி செலுத்தி வணங்கி, அவர் நூலிலிருந்து அடிகளாரின் வாழ்க்கை குறிப்புகளை வழங்குகிறோம்.


அடிகளாரின் பிறப்பு...


அண்ணாமலை-அலமேலு
சாமி A . S . சகஜானந்த அடிகளார், தமிழகத்தின் பூர்வக்குடிகளின் மறுவாழ்வை சீரமைத்த மாபெரும் புரட்சி துறவியாவார் . அடிகளார் வட ஆற்காடு மாவட்டம் ஆரணியிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியிலுள்ள மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் பழந்தமிழர் குடியிருப்பில் 1890 ஜனவரி 27 ம் தேதி அண்ணாமலை அலமேலு தம்பதியினரின் மகனாக பிறந்தார். பெற்றோர் அவருக்கு முனுசாமி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். முனுசாமிக்கு மாசிலாமணி என்னும் ஒரு சகோதரனும் எட்டியம்மாள், பாக்கியலட்சுமி, கமலநாயகி என்னும் மூன்று இளைய சகோதரிகளும் இருந்தனர்.

அடிகளாரின் இளமைக் காலம்...
அடிகளார் சிறுவயதில் உள்ளூரிளிருந்த அமெரிக்கன் ஆரம்பப் பள்ளியில் கல்வி பயின்றார். பிறகு திண்டிவனத்திலிருந்த வால்ட்டர் ஸ்கல்டர் என்னும் பள்ளியில் மேல்வகுப்பு படித்தார். அப்போது கிருத்துவ வேதநூலில் தெளிந்த பயிற்சியை பெற்றிருந்தார். அவரது திறமையைக் கண்ட பாதிரியார் அவருக்கு சிகாமணி என்னும் பெயரிட்டு அழைகலானர். மேலும் அவரை கிருதுவராக்க முயற்சிசெய்தனர. மதமாற்றத்தில் விருப்பமில்லாத அச்சிறுவன் படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்.
இளம் வயது முதற்கொண்டே முனுசாமி இந்து மத ஆன்மீக விதிகளை கடைபிடிக்க ஆர்வம் காட்டி வந்தார். இந்து சமய சாதுக்கள் போன்று எளிய, இனிய, தூய, ஆன்மீக வாழ்க்கையை மேற்கொள்வதிலும், சைவ உணவு பழக்கத்தை பின்பற்றுவதிலும், கொல்லா விரதம் பூண்டு வாழ்வதிலும் தனித்திருந்து சிந்தனையில் ஆழ்திருபதிலும் இவ்விளைஞன் தனி நாட்டம் கொண்டிருந்தார். 
முனுசாமியின் பெற்றோர் கோலார் தங்க வயலில் சுரங்க வேலை செய்ய சென்றபோது அவரும் உடன்செல்ல நேர்ந்தது. மாலை வேளைகளில் கோலாரில் நடைபெற்ற பல இந்து மத பெரியோர்களின் சொற்ப்பொழிவுகளை கேட்கும் வாய்ப்பினை பெற்றார். அது அவருக்கு ஆன்மீகத்தில் பெரும் இடுபாட்டினை ஏற்படுத்தியது.
மீண்டும் தன் பெற்றோருடன் கிராமத்திற்கு திரும்பிய முனுசாமி சுப்பையா நாயுடு பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கும் வேலையை மறந்து தனியாக அமர்ந்து ஆன்மீக தேடலில் தன்னை மறந்து ஏதேதோ பேசிக்கொள்வதைக் கண்ட ஊர் மக்கள் அவரை ஞானபித்தன் என்று அழைக்கலாயினர். 
அவர் ஊருக்கு அருகாமையிலிருந்த நீலமேக சுவாமிகளின் முனுகப்பட்டு ஆஷ்ரமத்திற்கு அடிக்கடிக் சென்று வந்தார். அதுவே அவர் யோகியாக உருமாற உலக உண்மைகளை அறிந்து கொள்ளும் இடமாக அமைந்தது.
இளைஞர் முனுசாமி தன் தாய், தந்தை, அண்ணன், தங்கைகள் மற்றும் உற்றார் உறவினர் அனைவரையும் பிரிந்து அசைவமும் மறுத்து 1907ஆம் ஆண்டு துறவறம் ஏற்றார். 
காஞ்சிபுரம் தட்சணா மூர்த்தி ஸ்வாமிகள் சென்னை வடிவேல் செட்டியார் மற்றும் கைலாச சுவாமி ஆகியோர் அவருக்கு துறவறத்தின் குருமாராகத் திகழ்தனர். வியாசர்பாடியிலிருந்த கரபாத்திர சுவாமி என்னும் சிவப்பிரகசரின் ஆசிரமத்தில் சீடராக சேர்ந்து ஆன்மீகத் தெளிவை பெற்றார்.
துறவு நிலை அடைந்த பிறகும் ஆசிரமத்திலிருந்த மற்றய சீடர்கள் காட்டிய தீண்டாமை பேதங்கள் அவரை பெரிதும் வாட்டியது. அங்கே அவருக்கு குடிநீர் மறுக்கப்பட்டது. இது குறித்து கரபாத்திர சுவாமிகளிடம் தன் வேதனையை வெளியிட்ட போது சுவாமிகள் "இன்று முதல் நீ இறைவனுடன் சகஜமாக கலந்து ஆனந்தம் பெறுபவன் என்னும் பொருள் படும் சகஜானந்தம் என்று அழைக்கபடுவாய். நாகரிகம் வளர்ந்து வரும் இந்த பட்டினத்திலே உள்ள பாகுபாட்டினைக் கண்டு பதருகிறாயே, தீண்டாமைக்காக குரல் கொடுத்த ஆதி தமிழர்களின் முதல் போராளி நந்தன் என்னும் சிற்றரசன் ஆண்டவனை காணவேண்டி தீயில் இறங்கிய தில்லை என்னும் சிதம்பரம் சென்று பார், அங்கே உள்ள உன் மக்களின் அவல நிலையை அறிவாய், அங்கே சென்று உன் மக்களுக்கு கல்வி தந்து விழிப்புணர்வு அடையச்செய்வாய் உன் துறவறம் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தில் ஆனந்தம் அடைவதாக அமையட்டும்" என்று ஞான தீட்சை அருளினார். 
முனுசாமி சகஜானந்த அடிகளாராகி தில்லை என்னும் சிதம்பரம் நோக்கி தன் நண்பருடன் பயணமானார்.